கொரோனா பெருந்தொற்றின் விளைவால் ஏற்பட்ட ஊரடங்கு காலம் பெரியவர்களைவிட குழந்தைகளைப் பல மடங்கு அதிகமாகவே பாதிப்புக்குள்ளாக்கியது. ஓடி ஆடித் திரிய வேண்டிய குழந்தைகளை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைக்கும் அவல நிலையை இந்த உலகம் கண்டது. பச்சைப் பசுங்கிளிகளாய் பறந்து திரிந்த பச்சிளம் பிள்ளைகள், லாக்டௌன் காலத்தில் சிரிப்பை மறந்து, மன உளைச்சலுக்கு உள்ளானார்கள்.
எதிர்பாராத சம்பவங்கள் மனித வாழ்க்கையைப் புரட்டிப் போடலாம். ஆனால், மனிதன் ஒரு போதும் தன்னம்பிக்கையைஇழக்கக்கூடாது; மனிதத்தை இழக்கக்கூடாது. நெருக்கடியான காலத்திலும் தலை நிமிர்ந்து வேண்டும். கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, நம்மை மேம்படுத்திக் கொள்வதுடன், நாம் சார்ந்த சமூகத்தையும் மேம்படுத்த வேண்டும். கொரோனா போன்ற கொடிய வைரஸ்கள் வருங்காலத்தில் எத்தனை வந்தாலும், வாழ்க்கையை அர்த்தமுள்ள வகையில், தன்னம்பிக்கையுடன் வாழ நம் குழந்தைகளுக்குப் பழக்குவோம் என்பதை இந்தக் கதைகளின் மூலம் எடுத்துரைக்கிறார் ஜி. மீனாட்சி.